எல்லா நாட்களிலும் அம்பாளை வழிபடலாம். அவள் அருள் என்றும் பரிபூரணமாக நிறைந்து இருக்கும். என்றாலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் அம்பாளுக்கு உகந்த நாட்களாக அமைகிறது. அது போல சில திதிகளும் அம்பாளுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பொதுவாக அம்பாள் என்றால் அன்னை லலிதா திரிபுர சுந்தரி நமது நினைவிற்கு வருவாள். ஸ்ரீசக்கரத்தில் மத்தியில் வசிப்பவள். இந்த ஸ்ரீ சக்கிரத்தின் 43 முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் தேவியர்கள் திதி நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த திதி நித்யா தேவதைகளை அவர்களுக்கு உரிய திதியில் வணங்குவதன் மூலம் நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
நாளை அதாவது, நவம்பர் 7-2023-ம் தேதி கிருஷ்ண பக்ஷ தசமி. இதை தேய்பிறை தசமி என்றும் சொல்லலாம். அதிலும் செவ்வாய் கிழமையோடு இந்த தேய்பிறை தசமி சேர்ந்து வந்திருப்பதால் இந்த திதிக்கு உண்டான அதி தேவதையை வழிபடும்போது, நமக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணபட்ச தசமி என்றாலும் சுக்கில பட்ச சஷ்டி என்றாலும் நாம் வணங்க வேண்டிய தெய்வம் அன்னை வஜ்ரேச்வரி
மஹா வஜ்ரேஸ்வரி இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள்.
வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.
நவம்பர் 7ஆம் தேதி 2023 செவ்வாய்க்கிழமை காலை 7:15 மணிக்கு தொடங்கக்கூடிய தசமி திதியானது, புதன்கிழமை காலை 9:19 மணி வரை இருக்கிறது. பொதுவாகவே சக்தி தேவதையின், அங்க தேவதைகள் இரவு நேரத்தில் தான் சக்தி பெறுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் இந்த வழிபாட்டை நாம் இரவு நேரத்தில் தான் மேற்கொள்ளப் போகின்றோம். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 12 மணி வரை நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இவளை வணங்குவதன் மூலம் பூர்வ ஜென்ம தீய வினைகள் நீங்கும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். நாம் சந்தித்து வரும் பிரச்சினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை நிற பேனாவைக் கொண்டு இந்த அம்பாளின் காயத்ரி மந்திரத்தை எழுத வேண்டும். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த வெள்ளை காகிதத்தில் கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்.
காயத்ரி மந்திரம்:
ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025